மலை பயணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அப்படி கால்நடையாக மலையேற விரும்பும் எல்லோரும் பர்வத மலை, சதுரகிரி மலை, வெள்ளியங்கிரி மலை என்று மிக உயர்ந்த மலைகளையே தேர்வு செய்வார்கள். அப்படி மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் ஒரு முறை இந்த வெண்குன்றம் மலைக்கும் சென்று வாருங்கள். இது சின்ன மலையாக இருந்தாலும் மிகுந்த சுவாரசியமான மற்றும் சவாலான மலையேற்றமாகவும் இருக்கும்.

வெண்குன்றம் மலை என்பது வந்தவாசி அருகே உள்ள ஒரு சிறிய மலைக்குன்று ஆகும். இதை தவளகிரி மலை என்றும் வந்தவாசி மலை என்றும் கூறுவார்கள். இதன் உயரம் 1500 அடி ஆகும். இந்த மலையின் உச்சியில் தவளகிரிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த மலையின் உச்சிக்கு செல்வதற்கு இரண்டு வழித்தடங்கள் உள்ளன. முதல் வழியாக செல்வதானால் பாதி மாலை வரை சிமெண்ட் படிக்கட்டுகள் வழியாக செல்ல முடியும். அதற்கு மேல் செல்லும் போது மலையேற்றம் சற்று கடினமாக தான் இருக்கும். இரண்டாவது வழி சற்று கடினமாக இருந்தாலும் சுவாரஸ்யமானதாக அமையும். பெரும்பாலும் இந்த மலைக்குச் செல்பவர்கள் போகும்போது இரண்டாவது வழியையும் வரும்பொழுது சிமெண்ட் படிக்கட்டு வழியையும் பயன்படுத்துவார்கள்.

அதன்படி நாங்கள் செல்லும்போது மண் பாதை வழியையே பயன்படுத்தினோம். பாதையின் ஆரம்பத்திலேயே பாறை கட்டிட அமைப்பில் இருந்த சிங்கத்தின் வாயில் இருந்து தண்ணீர் ஊற்றும் படி அமைத்திருந்தார்கள். ஆச்சரியத்துடன் அதை மேலே சென்று பார்க்கும்போது அந்த கட்டிட அமைப்பில் இருந்து 200 அடி நீளம் கல்லில் செதுக்கப்பட்ட வாய்க்கால் அமைத்திருந்தார்கள்.
அந்த வாய்க்காலின் முடிவில் சிறிய கல்தொட்டி ஒன்றும் அதற்கடுத்து பெரிய கல் தொட்டி ஒன்றும் அமைத்திருந்தார்கள். அந்தப் பெரிய கல் தொட்டியில் உள்ள துவாரத்தின் வழியாக நீர் ஊற்றிக் கொண்டிருந்தது. இந்த நீர் பெரிய தொட்டியில் நிரம்பியதும் சிறிய தொட்டிக்கு வந்து அதிலிருந்து வாய்க்கால் வழியாக மலையின் அடிவாரத்திற்கு செல்கிறது.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அந்த தொட்டிக்கு வரும் நீர் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. நானும் என் நண்பர்களும் இந்த தொட்டியை சுற்றி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. அடுத்து நாங்கள் அந்த மண் பாதையில் நடக்க ஆரம்பித்தோம். இடது புறம் ஒரு பெரிய குளம் ஒன்று தென்பட்டது. ஒரு காலத்தில் இருந்த குளம் படித்துறைகளோடு இருந்திருக்கும். இப்பொழுது முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

அடுத்து சிறிது தூரம் சிறிய சிறிய கற்களை அடுக்கி வைத்த படிக்கட்டுகளில் நடந்து கரடுமுரடான மலைப் பாறைகளின் மீது ஏற ஆரம்பித்தோம். சிறிது தூரம் சென்றதும் ஒரு பாழடைந்து போன கோட்டை சுவர்களை காணமுடிந்தது. இதிலிருந்து இந்த மலைக் குன்றை ஒரு கோட்டையாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

நாம் போகும் வழியில் கிணறு போன்ற சுனைகளையும் பார்க்க முடிந்தது. அடுத்து நாங்கள் போகும் வழி தான் மிக மோசமான கரடுமுரடான பாதையக இருந்தது. வழியில் சித்தர் குகைகளையும் பார்க்க முடிந்தது. மிகுந்த சிரமமான மலை ஏற்றத்தைத் தொடர்ந்து செங்குத்தான மலையை அடைந்தோம். இங்கும் மலை உச்சிக்கு செல்வதற்கு இரண்டு வழிகள் இருந்தது. இந்தப்பகுதி பருவத மலை உச்சியில் உள்ள செங்குத்தான மலைக் குன்றை ஞாபகப்படுத்தியது.

நாங்கள் முதல் பாதையை விட்டு இரண்டாவதாக உள்ள குகை பாதை வழியாகச் சென்றோம். எங்கள் உடல் மூச்சு வாங்கியது. ஒரு வழியாக மலை உச்சியை அடைந்து முதலாவதாக யோக நிலையிலுள்ள சிவபெருமானை தரிசித்தோம். மற்றும் மலை உச்சியிலுள்ள தவளகிரிஸ்வரரை தரிசனம் செய்தோம். மலையின் உச்சியிலிருந்து சுற்றியுள்ள கிராமங்கள், அதை சுற்றி உள்ள ஏரிகள் மற்றும் மலைகளை பார்க்கும்போது மலையடிவாரத்திலிருந்து உச்சி நோக்கி வரும்போது ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போய்விட்டது.

இக்கட்டுரையை காணொளியாக பார்க்க. https://youtu.be/4p1ZSmkXWLY
2 responses to “வெண்குன்றம் மலை பயணம்”
சுவாரஸ்யமான விரிவுரை. தொடரட்டும் உங்களின் பயணம்.
நன்றி ஐயா